Monday 16 December 2013

மௌனம் கலைந்தது

எனக்கு இப்படி ஒரு சுழல் வருமென்று நினைத்திருக்கவில்லை. கையில் இருந்த காகிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பார்த்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் கண்டக்டரிடம் பயணச் சீட்டு வாங்கப் பரிதவிக்கும் நிலைமையை மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்திக் கொண்டேன்.

"என்ன வாய்க்குள்ள கொழுக்கட்டையா வச்சிருக்க வாயத் திறந்து சொல்றது தானே எங்கேப் போகணும்னு"

பலதரப்பட்ட மனிதர்களை தினமும் சந்திப்பதாலோ என்னவோ அரசுப் பேருந்து கண்டக்டர்களின் இதயம் சுரணையற்றுக் கிடந்தது.

என் நிலைமை அவருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவருக்கு அடுத்த ஸ்டேஜ் வருவதற்குள் டிக்கெட் கொடுத்துவிட வேண்டும் என்ற அவசரம் தான் பிரதானம்.

"அட உன்னத்தான் கேட்கிறேன் எங்கப் போகணும்?"

கையிலிருந்தக் காகிதத்தை நீட்டினேன்.

"என்ன அளும்பா? வெறும் காகிதத்தை நீட்டுரே? காந்தி படம் போடாம நோட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? முதல்ல எங்கப் போகணும்னு சொல்லு"

என்ன இருந்தாலும் இவர்களுக்கு அடுத்தவர்களை நக்கல் அடிப்பதென்றால் அலாதிப்  பிரியம் தான்.

"ஏதோ எழுதியிருக்குங்க... ஆங்... கோரிப்பாளையம்"

என் முன்னால் நின்று கொண்டிருந்தவர் நல்ல வேளை என்னைக் காப்பாற்றினார்!

"ஓ கோரிப்பாளையம் போகனுமா?"

"பையனுக்கு வாய் பேச வராது போல"

"இந்தப்பா டிக்கெட் ... ஏழு ரூபா எடு"

"பரவாயில்லையே வாய்தான் பேச வரலைனாலும் புத்திசாலியா இருப்பான் போலேயே"

"வாயுள்ள பிள்ளை பிளைக்கும்பாங்க... இவன் வாயில்லா விட்டாலும் பிளைச்சுக்குவாம்பா"

ஆளாளுக்கு ஏகமாய் என் முதுகு நோகுமளவுக்கு வாயார வாழ்த்தினார்கள்.

அடுத்த பன்னிரண்டு மணித் திவளைகளும் பலரது புன்முறுவலுக்கு என் இங்கிதமான தலையசைப்பே பதிலானது.

பஸ்சிலிருந்து இறங்கி, கல்லூரி வாசலை நெருங்கினேன். பாண்டியராஜ் எதிரில் வந்தான்.

"டீ குடிக்கப் போறேன் வாரியா?"

ஆம் என்று சொல்வது போலவும், இல்லை என்று சொல்வது போலவும் தலையை அசைத்து விட்டு ஹாஸ்டலை நோக்கி விறுவிறுவென்று நடந்தேன்.

இதற்கு மேலும் தாங்க முடியாது.

பாத் ரூம் சென்று "த்தூ" என்று துப்பினேன்.

பல் பிடுங்கிய இடத்திலிருந்த பஞ்சு இரத்தப் பந்தாய் எகிறிப் பொய் விழுந்தது. வாயைக் கொப்பளித்தேன். என் மௌனம் கலைந்தது.

No comments:

Post a Comment