Thursday 4 December 2014

அணில்

அணில்

மதியம் வெயில் குளிரை விரட்டிவிட்டு வெளிச்சம் காட்டும் போது கம்பம்புல், சோளம், அரிசி கலந்த கலவையை ஒரு சட்டியில் கொட்டி வைப்பேன். அதைத் தின்ன அணில், மாடப் புறா, பூணியல் எல்லாம் 'கிச்கிச்'சென்று கூட்டமாய் வரும். அவை சண்டையிட்டுக் கொண்டும் சமரசம் செய்து கொண்டும் அதை உண்ணும் அழகு நேர்த்தியானது. மாடப் புறா மற்றும் பூணியல் எந்த வித ஆட்சேபமும் காட்டாமல் நெருங்கி நின்று உண்ணும். அணில் வந்து விட்டால் யாரையும் அண்ட விடாது. எல்லாம் தனக்கு மட்டும் தான் என்று உக்கிரம் காட்டும். அணிலுக்கு மட்டும் ஏன் இந்த குணம்? இராமரின் தயவு இருக்கிறது என்ற இறுமாப்போ?

அணில் என்றாலே சுவராஸ்யம் தான்.

என் வீட்டு முற்றத்தில் ஈஸி சேரில் சாய்ந்தாடிக் கொண்டே, தோட்டத்தில் தென் மூலையில் இலைகளை உதிர்த்து குச்சி குச்சி கம்புகளாய் நின்று கொண்டிருந்த உசிலை மரத்தின் தூரருகே அந்த அணில் என்ன செய்கிறது என்று வேடிக்கையாக நோட்டம் விட்டேன்.

கொசுவலை போல கிழிந்து போயிருந்த ஒரு கந்தல் துணியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தில் பின்னோக்கி ஏற எத்தனித்துக் கொண்டிருந்தது அந்த அணில். எலி ஒன்று யானையை வாலைப் பிடித்து இழுத்து மேம்பால உச்சிக்கு கொண்டு செல்ல முயல்வது போல இருந்தது அதன் செயல்.

முதல் தடவை பின்னங்கால்களை உயர்த்தி மரத்தில் வைத்த தருணத்திலேயே பேலன்ஸ் தவறி குட்டி கரணம் அடித்து சரிந்தது.

இரண்டாவது தடவை சமர்த்தாக இரண்டு ஸ்டெப்புகள் மேல் நோக்கி வைத்து முன்னேறியது. பரவாயில்லையே என்று நான் கண்களை விரித்து ஐயம் காண்பித்தேன். என் கண் பட்டதோ என்னவோ, அணில் தலை தரையில் மோதி மல்லாந்து விழுந்தது. ஆனாலும் வாயில் கவ்வியிருந்த துணியை விடவில்லை.

மீண்டும் முயற்சித்தது, மீண்டும் விழுந்தது. இப்படியே அது என் முன்னால் ஒரு விக்கிரமாதித்தனாய் பரிணமித்துக் கொண்டிருந்தது...

இது விளையாடுகிறதா? அல்லது ஏதாவது தேவையினிமித்தம் இப்படி செய்கிறதா?

குளிர் உடலை கவ்வ ஆரம்பித்தது. வீட்டிற்குள் செல்லலாம் என்று எழும்பினேன். சட்டென்று ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு சம்பவம் கண் முன் விரிந்தது.

********

குளிர் தணிந்து வெயில் படரத் தொடங்கியிருந்த காலம்.

இதே உசிலை மரத்தடியில் அந்த துணி கிடந்தது. பார்க்க அசிங்கமாக இருந்ததால், எடுத்து குப்பைத் தொட்டியில் கடாசினேன். மதியம் சாப்பிட வந்த போது கவனித்தேன் அதே துணி மீண்டும் மரத்தடியில் கிடந்தது? இது எப்படி சாத்தியம்?

ஒரு வேளை தோட்டக்காரர் எடுத்து வந்திருப்பாரோ? அவர் தேவைக்கு வைத்திருந்த துணியோ? நான் ஆபிசுக்கு போன பிறகுதான் தோட்டக்காரர் வந்திருப்பார். அவர் வேலையாகத்தானிருக்கும். இருந்தாலும் இந்த கந்தல் துணியில் என்ன செய்யப் போகிறார். கை துடைக்கக் கூட உதவாது. மீண்டும் எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு வீட்டிற்குள் போனேன்.

சாப்பிட்டு விட்டு ஆபிசுக்குக் கிளம்பும் போது ஒரு வித ஆர்வத்தோடு குப்பைத் தொட்டியில் நோட்டம் விட்டேன். பகீரென்றது! அந்தத் துணியைக் காணவில்லை. அசுர வேகத்தில் கண்களை உசிலை மரத்தடிக்குத் திருப்பினேன். அங்கு அந்தத் துணி கிடந்தது. தோட்டக்காரர் காலையில் மட்டும் தான் வருவார். நிச்சயமாக இது அவர் வேலையில்லை. அப்படியானால் யார் என்னிடம் கண்ணாம்பூச்சி காட்டுகிறார்கள்? உசிலை மரத்தில் பேயிருக்கும் என்று பாட்டி சொன்ன கதைகள் மூளையில் வியாபித்து பயம் தந்தது. ஆனாலும், இன்ஜினீயரிங் படிப்பு அப்படியிருக்காது என்று பயத்தை வழித்து எறிந்தது.

துணி எப்படி மரத்தடிக்குப் போகிறது என்பது தெரிந்தாக வேண்டும். இல்லையென்றால் மூளையில் ஓட்டை விழுந்தது போலிருக்கும். அந்தத் துணியை எடுத்து மீண்டும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சாய் நாற்காலியை எடுத்து வந்து முற்றத்தில் அமர்ந்தேன்.

"என்னங்க ஆபிசுக்குப் போவலயா?"

"ம் போவணும்"

கண்கள் குப்பை தொட்டியில் ஒட்டிக் கிடந்தன. கையில் ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம் போலிருந்தது. ஆனாலும் கவனம் தவறினால் துணி 'நடப்பதைப்' பார்க்க முடியாது என்று தவிர்த்தேன்.
அப்போதுதான் அது நிகழ்ந்தது.

ஒரு அணில் அரக்கப் பரக்க குப்பைத் தொட்டிக்குள் புகுந்தது. அது வெளியே வந்த போது அதன் வாயில் அந்தத் துணியைக் கவ்விக் கொண்டிருந்தது. துணியை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றது உசிலை மரத்தடிக்கு. எனக்கு வியப்பாக இருந்தது. மரத்தடியை அடைந்ததும் துணியை அங்கே போட்டு விட்டு. மரத்தில் ஏறி கிளை பிரிவில் உட்கார்ந்து கொண்டு தலையை மட்டும் வெளியே காட்டி என்னையே பார்ப்பது போல இருந்தது.

*******

அந்த அணில் தானா இது. வெயில் காலத்தில் வேண்டாம் என்று வெளியே எறிந்ததை, இப்போது குளிர் காலத்தில் போர்வையாக உபயோகிக்க எடுத்துச் செல்லப் பார்க்கிறதோ? வெயில் காலத்தில் துணியின் மேல் படுப்பது எரிச்சலாகத் தானிருக்கும்.

அணிலால் மேலே எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் மேலிருந்து கீழே போடுவது சிரமமில்லை. இப்படித்தான் வாழ்க்கையில். உயரச் செல்வது சிரமம். நிறைய சுமைகளை இழுத்துச் செல்ல வேண்டும். ஆனால் கெட்டழிவது ஈசி. அதற்கு வழிநடத்த நிறைய பேர் கிடைப்பார்கள்.

அணிலுக்கு உதவ நினைத்தேன். மரத்தடியில் கிடந்த துணியை எடுத்து கிளை பிரிவில் போட்டேன். அணில் எங்கோ ஓடி ஒளிந்திருந்தது.

மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கவனித்தேன். அணில் துணியை கிளை இடுக்கில் மெல்ல மெல்ல இழுத்து வைத்துக் கொண்டது.

இப்போதெல்லாம் அணிலைப் பார்க்கும் போது அது என்னிடம் ஏதோ சொல்ல வருவது போலத் தோன்றும்.

No comments:

Post a Comment