Monday 11 May 2015

ஒரு படம் இரண்டு கவிதைகள்

இதயம் போதும்


காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?

எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
 
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்...
துணிந்து வா நண்பா.

Photo credit: திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்

இனி எல்லாம் கனவில் தான்


பள்ளிக்கூடம் போகலாம்
பாடம் படிக்கலாம்
ஓடி ஆடி விளையாடலாம்
பலூன் உடைத்து விளையாடலாம்
கோவில் கொடையன்று
பலூன் பொம்மைகள் வாங்கலாம்
இனி எல்லாம் கனவில்தான்.

முன்பெல்லாம்
வியாபாரம் முடித்து
மாலையில் தேன் மிட்டாய்
வாங்கிக் கொண்டு வரும் அப்பாவுக்குக்
காத்திருப்போம்…
தெருக் கோடியில்
அப்பாவின் சைக்கிள் சத்தம்
கம்பில் பறக்கும் பலூன்கள் படபடப்பு
காணாமல் போன ஜவ்வு மிட்டாய்
தரும் ஆயிரம் உணர்ச்சிக் குவியல்
இனி எல்லாம் கனவில் தான்.

அம்மா காத்திருப்பாள்
சந்தையில் வாங்கி வரும்
சமையல் சாமான்களுக்காகவும்
பத்திரமாய்க் கூட்டி வரும்
அப்பாவுக்காகவும்.
சீக்கிரம் போட்டோ எடுங்க அண்ணே
வீட்டுக்குப் போகணும்.

No comments:

Post a Comment