Thursday 4 June 2015

பட்டுப்பூச்சி நியாயங்கள்


வல்லமை.காம் தளத்தில் நடந்த படக்கவிதைப் போட்டியில் (போட்டி எண் - 14) சிறந்த கவிஞர் சிறப்பு ஈட்டித் தந்த கவிதை (பட்டுப்பூச்சி நியாயங்கள்).


Photo Credit: திருமிகு வனிலா பாலாஜி
பட்டுப்பூச்சி நியாயங்கள்


உனக்குத் தெரியுமா?
உன் தோள் சாய்ந்திடும் பட்டு
உன் அடக்குமுறைகளின்
வெளிப்பாடு
உயிரைப் பிழிந்து நூலெடுத்து
கனவுக் கோட்டையை வேய்ந்தது
கல்லெறிந்துக் கலைக்கவா?
இங்கே கொட்டி வைத்துள்ளது
பஞ்சுப் பொதிகள் அல்ல
வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்
மாய்ந்து மாய்ந்து கட்டிய
கருவறையே
அன்பின் சமாதி ஆனால்?
வெற்றுத் தட்டில் வேதனையும்
பஞ்சுப் பெட்டகத்தில்
பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
மட்டுமே மிஞ்சும்!

பாவ நிவிர்த்தி?


பட்டெனப் பூச்சிகள் இறக்க நூல் தந்தன
சட்டென இரக்க யார் தருவார் பட்டுச் சேலை?
கொன்றதன் பாவம் தின்றால் போச்சு..
நூலெடுக்கப் பூச்சிக்களை அழித்த பாவம்
பட்டுடுத்தினால் போகுமா?
உடுக்கப் பருத்திக்கு வழியில்லை
படுக்கப் பாய்க்கு இடமில்லை
உலையிடப் பானையில் அரிசியில்லை
பகட்டுக்குப் பட்டுச்சேலை கிடைக்குமா?
பாவ நிவிர்த்தியாவது மிஞ்சுமா?
உயிரெடுத்து ஒர் உயிர் வளர்த்தேன்
அவன் பல உயிர் காப்பான் என்று நம்பி
நெஞ்சில் குவிந்து கிடக்கு வேதனை
ஆனாலும் முகத்தில் புன்முறுவல் பூசினேன்
‘ஆத்தா நீ பாஸாயிட்டே’ என்று
என் மகனும் வருவான்
மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் செய்தியோடு…

No comments:

Post a Comment